
4 - வயதில் : "எங்கப்பா போல ஒரு ஆளைப் பார்க்கவே முடியாது."
6 - வயதில் : "அவருக்கு எல்லா விஷயமும் அத்துபடி"
10 - வயதில் : "தங்கமானவர்.ஆனால் பொசுக் பொசுக்கு கோபம்
வந்திடும். அடிச்சிட்டாரு."
12 - வயதில் : "நான் சின்னப்பிள்ளையா இருந்தபோது, என்னை நல்லா கவனிச்சிக்கிட்டாரு
14 - வயதில் : "அவருக்கு சீக்கிரம் திருப்தியே வராது,நாப்பது மார்க் எடுத்தால் அய்ம்பது எடுக்கணும்பாரு.99மார்க் எடுத்தாகூட--ஒரு மார்க்கை ஏன் கோட்டை விட்டே'ம்பாரு'
16 - வயதில் : என்னைச் சுத்தி என்ன நடக்கிதுங்கிரதை புரிஞ்சிக்கவே மாட்டேன் என்கிறாரு. இன்னும் பழங்காலத்து மனுஷனாவே இருக்காரு."
18 - வயதில் : "எடுத்தேன் கவிழ்த்தேன்னுதான் எல்லா நடவடிக்கையும்."
20 - வயதில் : "அப்பப்பா,அந்த மனுஷனை புரிஞ்சுக்கவே முடியல. அம்மா எப்படிதான் காலம் தள்ளறாங்களோ?"
25- வயதில் : "எது கேட்டாலும் 'கிடையாது','இல்லை','கூடாது'ங்கிற பேச்சுதான்.
இவரெல்லாம் ஒரு மனுஷனா?"
30 - வயதில் : என் பையனை சமாளிக்கிறது கஷ்டமா இருக்கு. என்னை எங்கப்பா
எப்படித்தான் சமாளிச்சாரோ?"
40 - வயதில் : "என்னை எங்கப்பா எவ்வளவு ஒழுக்கத்தோட, கட்டுப்பாட்டோட வளர்த்தார் தெரியுமா? அதனால்தான்,இந்தளவு நல்லா
இருக்கேன்."
45 - வயதில் : "எங்கப்பாவை நினைக்கும்போது ரெம்ப பெருமையா இருக்கு."
50 - வயதில் : "ஒருத்தனை மேய்க்கிறதுக்கு எவ்வளவு சிரமப்படறேன்?நாங்க
மூன்று பேரு. ஒரு அண்ணன் மற்ற தம்பி அத்தனை பேரையும்
கட்டுக்கோப்பா வளர்த்தார் எங்கப்பா. அவர் கிரேட்."
55 - வயதில் : "ஒவ்வொரு விஷயத்தையும் திட்டம் போட்டு முடிக்கிறதுல அவரை மிஞ்ச ஆளே இல்லை."
60 - வயதில் : "எங்கப்பா போல ஒரு ஆளை பார்க்கவே முடியாது."
(நான்கு வயதில் நாம் சொன்னது சரிதான் என்பதை உணர்வதற்குள் 56ஆண்டுகள் ஓடி விடுகின்றன).
********************************************************************
இன்று இந்த பதிவு எழுதுவதற்கு முன் டி.வி பார்த்துக்கொண்டிருந்த போது விஜய் டி.வி.யை காண நேர்ந்தது அதில் ஒரு முதியவரை முவர் ஆட்டோவில் இருந்து இறக்கி வீதியில் மயக்க நிலையில் விட்டு செல்லும் காட்சியை காண நேர்ந்தது. அதற்கு வர்ணணையாளர் சொன்ன காரணம் முன்று மகன்களுக்குள் அப்பாவை யார் வைத்து பார்த்துக் கொள்வது என்ற சண்டையின் முடிவில் முவரும் அவரை வீதியில் விட்டெறிந்துவிட்டனர். பின்னர் அதில் காட்டப்பட்ட பிச்சை எடுக்கும் பெரியவர்களை பார்த்த போது மனம் கனத்தது. ஒரு காலத்தில் எப்படி எல்லாம் வாழ்ந்திருப்பார்கள். எத்தனை பேர்களுக்கு அவர்கள் பிச்சையிட்டுருப்பார்கள்
இரந்துண்ணும் வாழ்க்கைவிட கொடியது ஒன்றும் இல்லை. அதை விட நிராகரிப்பின் வலி அதிகம். மார் மீதும் தோள் மீதும் போட்டு வளர்த்த தன் மகனே தன்னை பாரம் என்று வீதியில் விட்டெறிந்து செல்லும் அந்த கணத்தை ஒரு நிமிடம் நினைத்து பாருங்கள். உன்னை வளர்ப்பது பாரம் என்று அன்று உன்னை தூக்கி எறிந்திருந்தால்..........
சிறு வயதில் தந்தை எதை சொன்னாலும் கோபம் என்ற நிலை வருகிறது. தியேட்டருக்கு சென்று டிக்கெட் வாங்க முண்டியடித்து தியேட்டர் காவல் காரனிடம் அடி வாங்கி ஒழுங்காக செல்லும் நாம் அதே ஒழுக்கத்திற்காக தந்தை தரும் தண்டணையை ஏற்றுக் கொள்வதில்லை. "எங்க அப்பன் இருக்கானே" என்று நண்பர்களிடம் கேலி வேறு.
நான் பள்ளியில் படித்த போது என் நண்பன் அவன் பெயர் மறந்து விட்டது. அவன் ஊர் கோட்டுர் அதனால் பள்ளியில் படிக்கும் போதே கோட்டுரான் என்தான் கூப்பிடுவோம். அவனுடைய அப்பா கஞ்சா வியாபாரி அவன் என்னுடன் திருப்பூரில் நஞ்சப்பா பள்ளியில் ஒன்றாக படித்தான். அவனும் நானும் நண்பர்கள் என்பதால் அவன் தந்தை வந்து பார்தது விட்டு செல்லும் போது நானும் உடனிருப்பேன். அவன் தந்தை கண்ணீர் உகுத்து விட்டு சொல்வார். " டேய் நான் தான் கஞ்சா போலீஸ் கேசு அது இதுன்னு அலைஞ்சுகிட்டு இருக்கேன் நீயாவது படிச்சு நல்ல வேளைக்கு வரணும்டா" அவர் மகன் மேல் மிகுந்த பாசம் அவருக்கு ஆனா நம்ம ஆள் அப்படியில்லை. ஒரு உதாரணம் என்னன்னா ஒரு நாள் அவன் பள்ளிக்கு வரவில்லை. அவனுடைய அப்பா வந்தார். வந்து வாத்தியரிடம் ( இவங்களுக்கு தனி பதிவு எழுதனும்.) 2000 ருபாய கையில கொடுத்தார். வாத்தியாருக்கு ஒன்னும் புரியல எதுக்குய்யான்னார். அதுக்கு அவர் சொன்னார். " அய்யா பையன் டியூசன் படிக்கிறானுள்ள அதுக்குன்னார். அதுக்கு எதுக்குய்யா 2000 ன்னார் வாத்தியார். அதுக்கு அவர் சொன்னரே பாக்கலாம் அய்யா தமிழுக்கு 500, இங்லீசுக்கு 500, கணக்குக்கு 500, கணிதத்துக்கு 500, என்று சொல்ல வாத்தியாருக்கு மயக்கமே வந்துருச்சு அடப்பாவி நம்ம கிட்ட ஒரு டியூசனும் படிக்கல வீட்டுல இப்படி பணம் வாங்கிட்டு இருக்கான்னு அவங்க அப்பா கிட்ட சொல்ல அவர் கண்களில் கண்ணீர் வராத குறை. அதன் பின் கோட்டுரானை பள்ளியில் பார்க்க முடியவில்லை. சில நாட்கள் கழித்து அவனது தந்தை அவன் வீட்டை ஓடி போய் விட்டதாகவும் வந்தால் தகவல் சொல்லும்படியும் சொல்லிவிட்டு போனார். இது நான் ஒன்பதாவது படிக்கும் போது நடந்தது.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அவனை பார்க்க நேர்ந்தது. பொள்ளாச்சிக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஒரு கூல்டிரிங்ஸ் குடிக்கலாமே என்று நினைத்து பேக்கரியில் நிறுத்தி கூல்டிரிங்ஸ் வாங்கிய போது இவன் கோட்டுரான் மாதிரி இருக்கானே என்று நினைத்து சரி எதுக்கு கேட்கனும் நினைச்சுட்டு காச கொடுத்துட்டு ஒரு தம் பத்த வெச்சேன். பாத்த பின்னாடி ஒரு குரல் "மாப்ள " தானே நீ என்று கேட்க ( என் பெயரையும் மறந்து விட்டானாம்) என்னை பள்ளியில் அழைக்கும் பெயரை சென்னவுடன் கோட்டுரான் தான் என்று உறுதியானது பின் சிறிது நேரம் பேசி கொண்டிருந்து விட்டு அவன் தந்தையை கேட்க இப்போது இல்லை என்றும் தனது இறுதி வரை தனக்காக உழைத்து செத்து போனார் என்றும் சொன்னான். கடைசியா அவன் சொன்னது. " என்னுடைய தப்பை எல்லாம் மன்னிச்சு நான் நல்லா வச்சுக்க வேண்டிய அவர் என்னை நல்லா வச்சுக்கிட்டார். என்னுடைய மகனுக்காவது நான் நல்ல அப்பனா இருக்கனும்ன்னு நெனைக்கறென் " பின் என்னுடை செல் நம்பரை கொடுத்துட்டு வந்து சேர்ந்தேன்.
பெரும்பாலும் எந்த தந்தையும் தன் மகனை கைவிடுவதில்லை. தெரிந்தவர்களிடம் படிப்பிற்காகவும், வேலைகாகவும் தன் சுய கவுரவத்தை விட்டுவிட்டு மகனின் எதிர்காலத்திற்ககாக தன்னை உருக்கி கொள்பவர்கள் இன்றும் இருக்கின்றனர். தீபாவளி பொங்களுக்கு தனக்கு புது துணி எடுக்காமல் மகனுக்கோ மகளுக்கோ வாங்கி கொடுத்து அழகு பார்க்கும் தந்தையர்தான் அதிகம்.
அம்மாவிடம் அன்பு அதிகம் அதுதான் " ஏன் எதுக்கு எடுத்தாலும் பையன திட்டறீங்க " ஆனால் அப்பாவிடம் அன்பும் உண்டு அதைவிட அக்கறையும் உண்டு அதனால் தான் " இப்படியே திரி உருபட மாட்ட " என் வசவுகள். தன் மகன் தடம் மாறிவிடுவானே என் பயமே கண்டிப்பாக உருமாறுகிறது.
என் தந்தையும் என்னிடம் நண்பர் போலவே பழகுவார். படிப்பு என்னடா படிப்பு உலகத்த படி அது தான் உன்னை முன்னேற்றும் என்று நான் ஐந்தாவது படிக்கும் போதே துக்ளக்கை அறிமுகபடுத்தியவர் ஏழாவது படிக்கும் போது என் தந்தையுடன் சரிக்கு சரி அரசியல் பேசியிருக்கிறேன் நான் வீட்டில் இருந்தால் பிடிக்காது என்னடா பொட்ட புள்ள மாதிரி வீட்டுல இருந்துகிட்டு போடா சுத்திட்டு வாடா என்பார். நல்லது கெட்டது அனைத்தும் பேசி புரிய வைப்பார். இது எல்லாம் என்வயசுக்கு பேச கூடாது என்ற வார்த்தை அவர் வாயில் வந்தததில்லை. காசை கொடுத்து அருகில் உள்ள ஊருக்கு போயிட்டு வா என்பார் என் அம்மா என் அப்பாவை திட்டுவார்கள் அவருடைய பதில் உலகத்தை கத்துக்கட்டும். வங்கியில் கணக்கு ஆரம்பிக்கும் முறையில் இருந்து ஊருக்கு மணியார்டர் அனுப்புவது வரை அருகில் இருந்து சொல்லி கொடுப்பார். தைரியம் அவரிடம் கற்றுக் கொண்ட முக்கியமான ஒன்று.
எந் தந்தை இறந்து இன்றோடு பதினோரு வருடங்கள் ஆகின்றன. எனது இருபதாவது வயதில் இறந்து போனார். அவர் கற்றுக் கொடுத்த உலக அனுபவம், தைரியம் இவைகளால் தான் எனது தங்கை திருமணமும், எனக்கென வீடும் கட்ட முடிந்தது. இன்று அவர் இல்லை முக்கியமான தருணங்களில் அவர் நினைவு வரும். இன்று விஜய் டி.வியில் பார்த்த நிகழ்ச்சி மனதை பாதித்ததால் இந்த பதிவு.
இது எனது முதல் பதிவு வலையுலக நண்பர்கள் ஆதரிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்
பிரியமுடன்
நந்தா